ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
தமிழ் நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி தனது 64 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
உடல் நலக்குறைவால் கடந்த 22 ஆம் திகதி ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஓ.பி.எஸ்சின் அரசியல் வாழ்க்கைக்கு பக்கத் துணையாக இருந்த விஜயலட்சுமியின் மறைவு அ.தி.மு.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஓ பன்னீர் செல்வத்தின் கையை பிடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோரும் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள ஓ.பி.எஸ்சின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் ஓ.பி.எஸ்சின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.