இந்தியாவுடனான உறவு உணர்வுகளுடன் தொடர்புபட்டது - அமைச்சர் ஜீவன் தொண்டமான் புகழாரம்
உலகின் மூன்றாவது பெரும் பொருளாதார சக்தியாக 2030 ஆம் ஆண்டில் இந்தியா மாறுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை பல நன்மைகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடுமென இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சுதந்திரத்துக்கு பின்னர் பல சவால்களை சந்தித்திருந்தாலும் தற்போது பாரிய முன்னேற்றத்தையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் காவலன்

மேலும் தெற்காசியாவின் காவலனான இந்தியா, எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு கை கொடுத்துள்ளதாகவும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன்களை இந்தியா வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதி, பல்வேறு நெருக்கடிகளில் இருந்து இந்திய வம்சாவளி மக்கள் சுதந்திரம் பெற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட உறவு
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு பூகோள அரசியல் மாத்திரம் அல்ல எனவும் அது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஓர் உறவுப் பாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றதாகவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.