சந்திரயான்-3 திட்டத்தின் இரு இலக்குகள் நிறைவு: அடுத்த சோதனை தீவிரம்! இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான்-3 திட்டத்தில் முக்கியமான 2 இலக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், தற்போது அறிவியல் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (Isro) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
விண்வெளியில் 41 நாள் பயணத்துக்கு பின் நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகம் ஓகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது.
மூன்று தடவைகளின் முயற்சியின் பின் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கப்பட்ட அதேவேளை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது.
ரோவர் வாகனத்தின் பணிகள்
இதனை தொடர்ந்து, சில மணி நேரங்களுக்கு பின்னர் லேண்டரில் இருந்த ரோவர் வாகனம் பத்திரமாக நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கிடையே, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடப்பட்டதோடு அது வலம் வரும் படங்களின் தொகுப்பை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.
அந்த காணொளியில் ம் முன்னும், பின்னும் ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை செய்வதை தெளிவாக காணமுடிகிறது.
இந்தநிலையில், இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில்,
"ரோவர் வாகனம் விநாடிக்கு ஒரு செ.மீ. வேகத்தில்தான் நகர்கிறது. இதனால் அதிகபட்சம் 500 மீட்டர் சுற்றளவு வரையே செல்ல முடியும். இதுதவிர, நிலவின் மேற்பரப்பு கரடு, முரடாக இருப்பதால் ரோவர் மிகவும் கவனமாக நகர்ந்து ஆய்வை முன்னெடுக்கிறது.
அதிலுள்ள லிப்ஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் சாதனங்களின் ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டன.
அந்த வகையில் லிப்ஸ் கருவி மூலம் நிலவின் தரைப்பகுதிகளில் ஆல்பா கதிர்கள் மூலம் துளையிட்டு அலுமினியம் போன்ற தாதுக்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பரிசோதனையில் முக்கிய தரவுகள்
அதேவேளை, லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே ஆகிய கருவிகளும் நிலவில் பரிசோதனைகளை செய்து முக்கிய தரவுகளை சேகரித்து புவிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலவின் தோற்றம், அதன் நீராதாரம், வெப்பம், நில அதிர்வுகள், அயனிகள், கனிம வளங்கள் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும்" என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத் திட்டப் பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில்,
சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில் மொத்தம் 3 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
அவை நிலவின் மேற்பரப்பில் லேண்டர் கலனை பாதுகாப்பாகவும், மிகவும் மெதுவாக தரை இறக்குதல், லேண்டரில் இருந்து ரோவர் வாகனத்தை பத்திரமாக கீழ் இறங்கி உலவவிடுதல் மற்றும் ஆய்வுக் கருவிகள் மூலம் அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை ஆகும்.
அதில் முதல் 2 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டன. தற்போது அறிவியல் பரிசோதனைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 26, 2023
?What's new here?
Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole ?! pic.twitter.com/1g5gQsgrjM
அதேவேளை, லேண்டர், ரோவர் ஆகிய கலன்களில் உள்ள அனைத்து சாதனங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.