இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலில் திருச்சி முகாமில் உள்ள முன்னாள் போராளிகள்!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1980க்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றனர்.
இந்நிலையில், கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாத அகதிகள் தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு சென்ற அகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களும் இருந்தனர்.
அவ்வாறு இனம் காணப்பட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவற்றில் இரண்டு முகாம்கள் மூடப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்காக திருச்சி முகாம் மட்டுமே இருந்தது. அதன் காரணமாக அவர்கள் மற்ற தமிழ் அகதிகளுடன் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்த முகாம்கள் தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவான கியூ பிரிவின் மேற்பார்வையில் உள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்வதாகவும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் 29 பேர் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓகஸ்ட் 18ஆம் திகதி திருச்சி மத்திய சிறையில் உள்ள 17 கைதிகள் பல முறைகளைப் பயன்படுத்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் மேலும் 12 கைதிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த இரண்டு சம்பவங்களிலும் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறையில் உள்ள முள்வேலிக்கு பின்னால் சுமார் 80 இலங்கைத் தமிழர்கள் பல வாரங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.