இந்திய வரவு செலவுதிட்டம் 2025 - இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய நன்மை
இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்தில் இந்திய நடுத்தர மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை வரவு செலவு திட்டத்தை (Union Budget) தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.
இந்திய ரூபாய் ஒதுக்கீடு
சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும் பட்ஜெட்டாக 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.
புதிய வருமான வரி முறையில் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ. 12 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒரு வருடத்துக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
இதில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கான 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மந்தநிலை
அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது இலங்கை ரூபாயில் சுமார் 1032 கோடியாகும். இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
அதேநேரம் இந்திய வரவு செலவு திட்டத்தில் வௌிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பூடான் நாட்டுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டுக்காக 2025 -26ஆம் ஆண்டுக்காக 2,150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |