இலங்கைக்கான உதவிகளை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி
இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இரு நாடுகளின் மின் கட்டங்களை இணைக்கவும், அண்டை நாடுகளுக்கு இடையே பெட்ரோலிய குழாய் இணைப்பை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) இன்று திங்கள்கிழமை அறிவித்தார்.
புதுடில்லியில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன்(anura kumara dissanayake) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.
பிரத்யேக டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இலங்கையுடன் இந்தியா ஒத்துழைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியாவின் வலுவான ஆதரவு
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை அவர் எடுத்துரைத்தார். “இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டொலர்கள் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் எமக்கு ஒத்துழைப்பு உள்ளது, மேலும் எங்களது திட்டங்களின் தெரிவு எப்போதும் பங்காளி நாடுகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டது” என்று அவர் கூறினார்.
மாஹோ-அநுராதபுரம்(Maho-Anuradhapura) தொடருந்து சமிக்ஞை அமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புக்கு உதவி வழங்குவதற்கான இந்தியாவின் முடிவையும் அவர் அறிவித்தார்.
இலங்கையுடனான இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பின் கீழ் புதிய முயற்சிகளை பிரதமர் மோடி மேலும் விவரித்தார்.
யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்
“அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
அடுத்த ஐந்தாண்டுகளில், இலங்கையின் 1500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார். வீட்டுவசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், பால்வளம், மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியாவின் ஈடுபாடும் வலியுறுத்தப்பட்டது.
கடற்றொழிலாளர்கள் தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை
மனிதாபிமான அடிப்படையில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்என தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கூறியதாவது: கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய கடற்றொழிலாளர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும். மக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது, இந்தியா உதவி செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |