இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறுகிறதா....! இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
இலங்கை மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் ஓர் மாநிலமாக ஏற்க தயார் என்று வெளியான டுவிட்டர் பதிவிற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் ஓர் மாநிலமாக ஏற்க தயாராக இருக்கிறோம். இதன் பிரகாரம் இலங்கையின் அனைத்து நெருக்கடிகளையும் தீர்ப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கரின் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் கணக்கொன்றில் இருந்து கருத்தொன்று வெளியானது.
மக்கள் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இது முழுக்கமுழுக்க போலியானது ஜெய்சங்கரின் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான பதிவு என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளது.
தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்பு ரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில், அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் ருவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட போலியானபடம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும்.தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம்.
— India in Sri Lanka (@IndiainSL) April 20, 2022
இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும்வகையில், அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை.
— India in Sri Lanka (@IndiainSL) April 20, 2022
