இலங்கையில் தொடர்ந்து தங்கவுள்ள இந்திய இராணுவம்
இலங்கையில் இந்திய இராணுவம் தங்கியிருக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்,சேதமடைந்த பாலங்களுக்கு பதிலாக இரும்புப் (பெய்லி பாலம்) பாலங்களை அமைக்கும் பணிகளுக்காகவே இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது.
விமானம் மூலம் வந்த பெய்லி பாலங்கள்
இதன் ஒரு கட்டமாக சேதமடைந்த பாலங்களை சீரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக 4 தற்காலிக இரும்புப் பாலங்கள் (பெய்லி பாலம்) இந்திய விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் இந்தியாவினால் அனுப்பி வைக்கப்பட்டன.

அத்துடன் இந்திய இராணுவத்தின் 19 ஆவது பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 48பேர் கொண்ட அணி ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது. இவர்கள் சிறிலங்கா இராணுவ பொறியியல் பிரிவு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து, பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் சேதமடைந்த பாலத்துக்குப் பதிலாக பெய்லி பாலத்தை அமைத்துள்ளனர்.
திறக்கப்பட்ட புதிய பெய்லி பாலம்
இரண்டாவதாக கண்டி-ராகல வீதியில் சேதமடைந்த பாலத்துக்குப் பதிலாக 100 அடி நீளமான புதிய பெய்லி பாலத்தை இந்திய இராணுவ குழுவினர் அமைத்துள்ளனர். இதனை நேற்று முன்தினம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் அநுர அரசின் அமைச்சர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிலையில், இந்தியா அறிவித்துள்ள 450 மில்லியன் டொலர் உதவித் திட்டத்தின் கீழ், மேலும் 15 பெய்லி பாலங்களை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவற்றை அமைக்கும் பணிகளில் இந்திய இராணுவ பொறியியல் படைப்பிரிவு தொடர்ந்து ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

