இந்திய மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் - இலங்கை கடற்படை கொடூரம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் திகதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,கார்த்தி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இன்று (23) அதிகாலை காரைக்கால் தென் கிழக்கு 44 நாட்டிகல் மைல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக்கொண்டு இரும்பினால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் ஐந்து மீனவர்களும் பலத்த காயமடைந்த நிலையில் (23) கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின் மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக்கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும பொலிஸாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.