இந்திய வெளியுறவு அமைச்சரின் பாதுகாப்பு திடீரென அதிகரிப்பு
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின்(s.jaishankar) பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு
அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெய்சங்கருக்கு ஏற்கனவே மத்திய ரிசர்வ் காவல்துறை படை கொமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கொமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது.
ஒபரேஷன் சிந்தூர்
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஒபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசி வருகிறார்.
இத்தகையச் சூழலில்தான், ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பான செய்தி வந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, விஐபிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
