கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய புவியியலாளர்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 108 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளைத் தனது பயணப் பையில் மறைத்து எடுத்து வந்த 60 வயதான இந்திய பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய புவியியலாளர் என அடையாளம் காணப்பட்ட இந்த சந்தேக நபர், அறிவிப்பதற்கு எந்தப் பொருட்களும் இல்லாத பயணிகள் செல்லும் விமான நிலைய வருகை முனையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகளின் தகவல்படி, உகாண்டாவின் கம்பாலாவிலிருந்து கத்தாரின் தோஹாவிற்குப் பயணம் செய்திருந்த அவர், அங்கிருந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம் நேற்று(15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அவரது பயணப்பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சான்றிதழ்கள் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோப்பு உறைகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோகிராம் மற்றும் 150 கிராம் கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைதொடரந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |