இந்திய பெருங்கடல் தொடர்பில் பிரான்ஸின் நிலைப்பாடு!
இந்திய பெருங்கடல் தொடர்பில் பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பொதுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து, பிரான்ஸ் இலங்கையுடன் பயணிப்பதாக ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இலங்கை பயணம்
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான 75 ஆண்டு கால உறவு, நிலைத்தன்மை மற்றும் உறுதியை வெளிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக, அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரான்ஸ்க்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்ததாகவும், பிரான்ஸ் அதிபர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகவும் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பெருங்கடல்
இரு நாட்டு தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய பெருங்கடலில் உள்ள நாடான பிரான்ஸ், உலகின் இரண்டாவது பெரிய பிரத்தியேக பொருளாதாரத்தை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறந்த பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய சிறந்த இடமாக இந்திய பெருங்கடல் திகழ்வதாகவும் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் நான்காவது பாரிய கடன் வழங்குநராக உள்ள பிரான்ஸ், இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.