இந்திய மருத்துவ மாணவர் உக்ரைனில் பலி
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஆறாவது நாளாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அங்கு சிக்குண்டுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் அரச கட்டிடம் சேதமடைந்த காணொளி வெளியாகியுள்ளது.
கார்கிவ் நகரில் இருந்து குறித்த மாணவன் வெளியேறி தொடருந்து நிலையம் சென்ற போது, எறிகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இதனையடுத்து, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ரஷ்யா, உக்ரைன் தூதர்களிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதேவேளை, உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்திய பிரஜைகளை மீட்க்கும் 'செயல்திட்டம் கங்கா' மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அயல் நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளனர்.
அத்துடன் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஒபரேஷன் கங்கா' திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
