திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ஐ.என்.எஸ்.கரியல் இந்திய போர்க்கப்பல்
தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்து வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.கரியல் (08) திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பலை இறங்குதுறையில் வைத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,நாடாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன,மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் இலங்கைக்கான இந்தியாவின் யாழ்.துணைத்தூதரக துணைத்தூதர் சாய் முரளி ஆகியோரும் வரவேற்றனர்.
அதன் பின்பு உலர் உணவுப்பொருட்கள், ஆடைகள்,குடிநீர்,மருந்து பொருட்கள் அடங்கிய 700 மெற்றிக் தொன் நிவாரணப்பொருட்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் துணைத்தூதர் சாய் முரளியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சாகர் பந்து நடவடிக்கை
இந்திய கடற்படையின் சாகர் பந்து நடவடிக்கை எனப்பெயரிடப்பட்ட இவ் மனிதாபிமான உதவி நடவடிக்கை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக துணைத்தூதர் சாய் முரளி ஊடகங்களுக்கு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கை,இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடு. டித்வா புயலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை அடுத்து எமது அரசு உடனடியாக இலங்கைக்கு உதவியளிக்க முன்வந்தது.சாகர் பந்து என்ற இந்த மனிதாபிமான நடவடிக்கை மூலம் கடந்த 27 ஆம் திகதி முதல் பல்வேறு வகையிலான உதவிகளை வழங்குகின்றோம்.
பிராந்தியத்தில் எமது நாடே முதலில் இலங்கைக்கு உதவிகளை வழங்கியது. அது இன்னும் தொடரும்"என்று கூறினார்.
இதற்கு முன்னர் டிசம்பர் மாதம் முதலாம் திகதி இந்தியகடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ்.சுகன்யா மூலம் 12 மெற்றிக் தொன் உதவி நிவாரணப் பொருட்கள் திருகோணமலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
