இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அந்தவகையில் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அவரது பயணத்தின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விடயம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டு நடவடிக்கைகள்
இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களின்படி, இந்தப் பயணத்தின் போது, ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டபோது கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) முழுமையாகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்துவது குறித்த ஆய்வும் இந்த கலந்துரையாடல்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுடனான நெருங்கிய பாதுகாப்பு கூட்டாண்மைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பொதுவான பிராந்திய பாதுகாப்பு கவலைகள் குறித்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |