மற்றுமொரு வழக்கில் சிக்கிய மஹிந்தானந்த மற்றும் நளின்
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) ஆகியோருக்கும், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சிக்கும் (Nanda Mallawarachchi) எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (21) குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் மற்றும் டாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குறித்த மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.
எனினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த நீதிமன்றத் திகதியில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
