பணவீக்கம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் முதன்மைப் பணவீக்கமானது கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில் நவம்பர் மாதத்தில் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம்
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 3.5 சதவீதமாக பதிவாகியிருந்த உணவுப் பணவீக்கமானது கடந்த நவம்பரில் 3.0 சதவீதத்திற்கு குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உணவல்லாப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஒக்டோபரில் 1.4 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில் நவம்பர் மாதத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2025 நவம்பரில் 0.23 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு, உணவு வகைகள் -0.18 சதவீதப் புள்ளிகளினால் பங்களித்ததுடன் உணவல்லா வகை -0.05 சதவீதப் புள்ளிகளால் பங்களித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |