இந்தியாவில் பெண்களின் திருமண வயது குறித்து வெளிவந்த தகவல்
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
"ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்"என 2020ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை இந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக உயர்த்தும் இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.
இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.