காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்புப் படை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் இதன்போது அவரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபரின் வசம் இருந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியும், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலை
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான காவல்துறை அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்குள்ளான மற்றைய காவல்துறை அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |