மன்னாரில் உணவு கையாளும் நிறுவனங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை
மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பல உணவு கையாளும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மருத்துவ அறிக்கைகள்
குறிப்பாக, உணவு தயாரிக்கும் இடங்களில் ஈக்களின் நடமாட்டம், எலிகளால் உணவு மாசடையும் அபாயம், உணவுப் பொருட்களைச் சேமிக்கும் இடங்களில் சுகாதாரக் குறைபாடுகள், உரிய அனுமதிகள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ அறிக்கைகள் இல்லாமை போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமை, அசுத்தமான பாத்திரங்களில் உணவைச் சேமித்தல், உணவுப் பொதியிடுவதற்குப் பொருத்தமற்ற பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் உள்ளிட்ட குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய குறைபாடுகள் உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் பாதிப்பதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
இதனையடுத்து, சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

