சர்வதேச நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்ப முடியாது: சஜித் திட்டவட்டம்
தற்போது சில அரசியல் கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாமல் பயணிக்க முடியும் என கூறுவதாகவும் இந்த முட்டாள்தனமான கதையை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கம்பஹா (Gampaha) - திவுலப்பிட்டிய, ஹுனுமுல்ல மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, GAT, WTO போன்றவற்றின் மூலம் உலகப் பொருளாதார முறைமை தாபிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்
சர்வதேச நாணய நிதியம் இல்லாமலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என யாராவது முட்டாள்தனமான வீரவாதத்தை முன்வைத்தால் அது உலக நகைச்சுவை.
மக்களுக்குச் சாதகமான சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், இன்று அவ்வாறான உடன்பாடு எட்டப்படவில்லை.
மக்களின் வலிகளுக்கு முன்னுரிமை கொடுத்து IMF ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தரையில் கால் பதிக்காமல், வானில் இருந்துகொண்டு கைச்சாத்திட்ட மக்கள் விரோத ஒப்பந்தமே தற்போதைய அரசாங்கம் இணக்கம் கண்டுள்ள ஒப்பந்தம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் போது, அவை நாட்டுக்கு பொருத்தமானதாகவும் அமைய வேண்டும்.
இந்த ஒப்பந்தங்கள் மனிதாபிமானமாக இருக்க வேண்டும். மனிதனை பாதுகாத்து வாழ வைப்பதே மனிதனின் உன்னத கடமையாகும். எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் மனிதனை பாதுகாக்கும் ஒன்றாக அமையவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |