இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் உதவி தொடர்பான முக்கிய மதிப்பீடொன்றை மேற்கொள்வது இந்த குழுவினரின் பயணத்துக்கான முக்கிய நோக்கமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் முதலாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்திருந்தது.
இதையடுத்து, இலங்கைக்கான நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி உதவிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு
இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் சரிவர நடைமுறைப்படுத்துகிறதா என்பது தொடர்பிலும் இந்த பயணத்தின் போது ஆராயப்படவுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நிதியத்தின் இரண்டாம் தவணை நிதியுதவின் மீளாய்வு 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தரப்பினரின் பயணம் மிக முக்கியமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |