மூடிமறைக்கப்படுமா சிறைக்குள் கைதிகளை மிரட்டிய விவகாரம் - எதிரணி எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி தமிழ்க் கைதிகள் மீது துப்பாக்கிவைத்து அச்சறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது இதுவரை சட்டநடவடிக்கை எடுக்காமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரைகளும் கடந்த காலத்தைப்போல மூடிமறைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“மனித உரிமை பற்றிய விடயத்தில் இலங்கையில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் பற்றிய விடயம் அதிகமாக பேசப்படுகின்றது.
அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சென்று கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து அவர் பதவிவிலகினார். அதன் பின் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தற்போது ஒரு மாதமாகின்ற போதிலும் அந்தக்குழு முன்வைத்த பரிந்துரைகள் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த செய்த செயற்பாட்டினை குற்றவியல் விசாரணையின்படியே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் அரசாங்கம் அதனை மூடிமறைக்க முயற்சிக்கின்றது.
2012ஆம் ஆண்டில் கொழும்பு வெலிக்கடைசிறையில் கைதிகள் பலர் உயிரிழந்தனர். விசாரணை குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இன்றுவரை அதன் பரிந்துரைகள் அவை செயற்படுத்தப்படவில்லை. அநுராதபுரச் சிறையில் இடம்பெற்ற சம்பவத்திலும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டாலும்கூட அவையும் நடைமுறைப்படுத்தப்படாது என்ற அச்சம் உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைமா அதிபரிடமும் முறையிடப்பட்டாலும் விசாரணை இடம்பெறுவதில்லை. சிறைக்கைதிகளின் உயிர்பாதுகாப்பு ஸ்ரீலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
ஆகவே தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
எனினும் இதற்கு பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர் அலிசப்ரி, அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் உட்பட எவருக்கும் எந்தவொரு உயிர் அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கை இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.