மிரிஹானை ஆர்ப்பாட்டத்தில் கைதானோரை காவல்துறையினர் தாக்கியமை தொடர்பில் விசாரணை நடாத்த உத்தரவு
அரச தலைவரின் மிரிஹானை இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டோர் கைது செய்ப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை நடாத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் அரச தலைவரின் மிரிஹானை இல்லத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் பலர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டோர் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் எழுந்த முறைப்பாட்டுக்கு விசாரணைகளை நடாத்துமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இதற்கான உத்தரவை இன்று நுகேகொட வலயத்துக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சருக்கு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைக்கான உத்தரவு இன்று பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.
மிரிஹானை காவல் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நபர்கள் தாக்கப்பட்டமை, அமைதி ஆர்ப்பாட்டத்தை குழப்பும் வகையில் தாக்குதல் நடாத்திய காவல்துறை மற்றும் இராணுவத்தினர், தக்குதலுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள், தாக்குதல்களை மேற்பார்வை செய்த அதிகாரிகள், பஸ் வண்டிக்கு தீ மூட்ட இடமளித்து பார்த்துக்கொண்டிருந்த காவல்துறை, இராணுவ மற்றும் விஷேட அதிரடிப் படையினரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் காவல்துறை மா அதிபருக்கு முறைப்பாடளித்தது.
இது தொடர்பிலேயே ஆராய்ந்து, குறித்த முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க காவல்துறை மா அதிபர் நுகேகொட பொலிஸ் அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளார்
