கோட்டாபயவுக்கு எதிரான விசாரணை! லலித் - குகன் வழக்கு தொடர்பில் யாழ். நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடரிலும் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுமீதான விசாணை
இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பாதுகாப்பு காரணங்கள்
பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபயராஜபக்ச நிகழ்நிலை (online) ஊடாக தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை அடுத்து, கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மன்ற , அடுத்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |