யாழில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் தவறான செயல்: விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அதனையடுத்து, மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
கைது நடவடிக்கை
பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.

அதேவேளை, பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.
தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து , காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தினர்.
விசாரணை
அதேவேளை , தமக்கு காவல்துறை உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான காணொளிப் பதிவு மற்றும், ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் , அவர்களுக்கு உதவுவதாக கூறிய காவல்துறை உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        