சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தாக்குதலுக்குள்ளான டயனா கமகே : ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணைகள்
சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு, அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாளை மறுதினம் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மை தாக்கியதாக கடந்த வெள்ளிக்கிழமை டயனா கமகே தெரிவித்திருந்தமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருந்தது.
பிரதி சபாநாயகர் தலைமையில் விசேட குழு
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன விசேட குழுவொன்றை நியமித்திருந்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் ஜயந்த கருணாதிலக ஆகிய உறுப்பினர்களை உள்ளடக்கி குறித்த குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழுவுக்கு இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைப்பது தொடர்பான கோரிக்கையை தாம் முன்வைக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகவுள்ள விசாரணைகள்
இந்த நிலையில், டயனா கமகே தாக்கப்பட்டமை தொடர்பான முழு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அஜித் ராஜபக்ச தலைமையிலான குழு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.