போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
கிரிந்த- அந்தகல கடற்பகுதியிலிருந்து சுமார் 349 கோடி பெறுமதியான 330 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களுள் பொரளை பகுதியில் வசிக்கும் இராணுவத்தின் முன்னாள் கமாண்டோ சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
அவர் 22 ஆண்டுகள் இராணுவ கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றியுள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக ஏற்பட்ட விபத்தின் பின்னர் இராஜினாமா செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொத்து விபரம்
குறித்த சந்தேகநபருக்கு சொந்தமாக பொரளை பகுதியில் உள்ள மூன்று மாடி வீட்டிற்கு மேலதிகமாக அதற்கு அருகில் கட்டப்பட்டு வரும் நான்கு மாடி வீடொன்றும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன் இரு வீடுகளும் நேற்று (14.11.2025) காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபரின் மனைவியின் வங்கிக் கணக்கொன்றிலிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தையும் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளதுடன் சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் எதிர்காலத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளன.
சந்தேகநபர், பிரான்சில் மறைந்திருப்பதாக நம்பப்படும் ரூபன் எனப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய உதவியாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவர் நாட்டில் போதைப்பொருள் கடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டவிரோத சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் கொழும்பு 9 ஐச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நேற்று (14.11.2025) கைது செய்திருந்தது.
அதன்படி, மதுபான விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் வாங்கிய 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 07 நாட்கள் வரை செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |