இலங்கையில் முதலீடு - அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து தொடர்ந்து கரிசனை கொள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஊழல், சட்டவிரோத நிதி, பணமோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான அனுமதிக்கப்பட்ட சூழலுக்கான சாத்தியக்கூறுகள் இந்த சட்டத்தில் காணப்படுவதாக, ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் (Alaina P. Deblitz)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்துடனான கலந்துரையாடலின்போது அமெரிக்கத் தூதுவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் இந்த விடயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமெனவும், ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்கள் முன்கணிப்பு மற்றும் முதலீட்டு சூழல் பற்றிய தெளிவான புரிதலை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ், ஒரு அமெரிக்க நிறுவனமோ அல்லது தனிநபரோ வர்த்தகத்தை பெறுவதற்காக அல்லது தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் மதிப்புள்ள எதையும் வழங்குவதும், செலுத்துவதும் அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளிப்பதும் சட்டவிரோத செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரத் திட்டத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட முதலீட்டைப் பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் விரும்பும் விடயத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மிகப்பெரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்கு, சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளைச் சரியாகப் பெறுவது முக்கியத்துவம் உடையது எனவும், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் நியாயமற்ற போட்டிகளுக்கு வாய்ப்பளிக்கப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டமானது நாட்டிற்காக பெரும் கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் விளைவாக அடுத்த நூற்றாண்டுக்கும் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரம் சந்தேகத்திற்கிடமான பொருளாதார நடைமுறைகள் மற்றும் ஊழலுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர் தரமான, அமெரிக்க தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக சரியான நிலைமைகள் நிலவுவதை உறுதிப்படுத்துவதுடன், பிராந்தியத்தில் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் நம்பகமான பொருளாதார பங்காளியாக ஸ்ரீலங்கா உரிமை கோர உதவுவது அரசாங்கத்தின் முன்னுரிமை கொள்கை இலக்காக இருக்க வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.