ரணிலின் இங்கிலாந்து பயணம்: முன்னாள் உயர்ஸ்தானிகரிடம் ஏழு மணி நேர விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் அப்போதைய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவை உயர்ஸ்தானிகருக்கு வரவழைத்து, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், 2023 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபா செலவு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு, கடந்த திங்கட்கிழமை (17.11.2025) முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
விசாரணை
ஏனெனில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோது, சரோஜா சிறிசேன இங்கிலாந்தில் உயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்தார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர்ஸ்தானிகர் பதவியில் இருந்து அவர் விலகிய போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்னும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பிதழை வழங்கியது யார், இந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா, உயர்ஸ்தானிகராலயம் இராஜதந்திர வழிகளை முறையாகப் பயன்படுத்தியதா, அழைப்பின் நம்பகத்தன்மையை உயர்ஸ்தானிகராலயம் சரிபார்த்ததா, இந்த வருகை ஒரு உத்தியோகபூர்வ வருகையாக மற்றும் ஜனாதிபதி இங்கிலாந்து வந்ததிலிருந்து அவர் புறப்படும் வரை உயர்ஸ்தானிகராலயம் என்ன சேவைகளை வழங்கியது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்ஸ்தானிகரைத் தவிர, அப்போதைய துணை உயர்ஸ்தானிகர் மனோரி மல்லிகாரச்சி மற்றும் பிற அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், குறித்த குழுவினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் விசாரணைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |