அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா தன் மீதான பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்கினால், 60 சதவீத உயர் மட்டச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் வீரியத்தைக் குறைக்க (Dilute) ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் அணுசக்தித் துறைத் தலைவர் முகமது இஸ்லாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், யுரேனியத்தை நீர்த்துப்போகச் செய்வது என்பது பதிலுக்கு அமெரிக்கா அனைத்துத் தடைகளையும் நீக்குமா என்பதைப் பொறுத்தே அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதமற்ற நாடு
அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான 90 சதவீதத் தகுதிக்கு மிக நெருக்கமான 60 சதவீத அளவில் யுரேனியத்தைச் செறிவூட்டும் ஒரே அணு ஆயுதமற்ற நாடு ஈரான் மட்டுமே என்று ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

ஈரானின் இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி விவகாரத்தில் விதித்துள்ள கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்படுகின்றது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதி வழியிலான தேவைகளுக்கே என்று அந்நாடு வாதிட்டாலும், ட்ரம்ப் நிர்வாகம் அதன் யுரேனியம் செறிவூட்டலுக்குப் பாரிய தடையை விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
மறைமுகப் பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் ஓமன் நாட்டிற்கு, ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு பேரவையின் தலைவர் அலி லாரிஜானி இன்று (10-02-2026) பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுமார் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மீண்டும் தொடங்கியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளில், லாரிஜானி ஈரானின் புதிய நிலைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த செய்திகளைப் பரிமாறிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்தே ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்தது.
தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீதான வரி விதிப்புகள் காரணமாகப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பதற்றத்தைத் தணிக்க இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |