எண்ணெய் வர்த்தகத்தை முடக்க அமெரிக்காவின் அரசியல் மிரட்டல்: கொந்தளிக்கும் ரஷ்யா
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுப்பதற்காக, அமெரிக்கா மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டைக் குற்றச்சாட்டை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முன்வைத்துள்ளார்.
உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் நிதி ஆதாரத்தை முடக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
எண்ணெய் இறக்குமதி
இதனடிப்படையில் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கான 25 சதவீத அபராத வரியும் உள்ளடங்கியிருந்தது.

இந்தியா தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்து வருவதால், அமெரிக்கா அந்த அபராத வரியை ரத்து செய்ததுடன், பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 ஆகக் குறைத்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்துவதையே வரிக்குறைப்பிற்கான நிபந்தனையாக டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளதாக லாவ்ரோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ உறவு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வரிகள் மற்றும் தடைகள் வாயிலாக உலகப் பொருளாதாரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மலிவான விலையிலான ரஷ்ய எரிபொருளைத் தடுத்து, அதிக விலையுள்ள அமெரிக்க எரிவாயுவை விற்கவே இத்தகைய உத்திகள் கையாளப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் இராணுவ உறவுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்வதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் கண்டிக்கத்தக்கவை எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |