இலங்கைக்கு உதவ முன்வந்தது ஈரான்! எரிபொருள் வழங்க தயாரென அறிவிப்பு
இலங்கை ஒரு நட்பு நாடு என்றும், அந்நாட்டிற்கு எந்த நேரத்திலும் உதவ ஈரான் தயாராக உள்ளது எனவும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கை எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை இலங்கைக்கு வழங்க ஈரான் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஈரான் தனது நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை என்றும் அலிரெஸா டெல்கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மரியாதைக்குரிய நாடு
அதன்படி, இலங்கை சிக்கலில் சிக்குவதை தனது நாடு விரும்பவில்லை என்றும், இலங்கை ஈரானுக்கு மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் ஈரானிய தூதுர் கூறியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான 'ஐரிஸ் தேனா'வின் குழுவினரை மீட்க, ஈரான் முதலில் கோரிய உதவியை இலங்கை வழங்கியதையும் அலிரெஸா டெல்கோஷ் நினைவு கூர்ந்துள்ளார்.
அத்தோடு, ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் ஈரான் அரசாங்கம் தயாராக உள்ளது என்று தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |