இஸ்ரேலின் மொசாட் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் : தொழிலதிபர் உட்பட நால்வர் பலி
ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த உளவு அலுவலகம் குர்திஸ்தானின் அர்பில் பகுதியில் அமெரிக்க தூதரகக் கட்டிடத்தின் அருகே அமைந்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பு ஈரானுக்கு எதிராக உளவுத் தகவல்களை சேகரிப்பதாக நீண்ட நாளாக குற்றச்சாட்டு நிலவுகின்றது.
மொசாட் அலுவலகம் மீது தாக்குதல்
இந்நிலையில் மொசாட் உளவுத்துறை அலுவலகம் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து குர்தீஷ் பிராந்திய அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், ஈரானின் தாக்குதலினால் அப்பாவி பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெஷ்ராய் தியாஷி என்ற உள்ளூர் தொழிலதிபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இவர் வீடு விற;பனை, பாதுகாப்பு முகவர் நிறுவனத் தொழில்களை வெற்றிகரமாக செய்துவந்த நிலையில் தியாஷியின் அரண்மனை மீதே ஈரானின் குண்டு வீழ்ந்துள்ளது.
ஈரானின் பாதுகாப்புப் படையின் தகவல்
இதற்கிடையில், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் பாதுகாப்புப் படையான புரட்சிகர காவல் அமைப்புகள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அதில் “சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்.
ஈரானுக்கு எதிராக உளவு வேலைகளை செய்துவந்த இஸ்ரேலுக்குச் சொந்தமான மொசாட் உளவு அமைப்பின் தலைமையகத்தை தாக்கி அழித்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
80இற்கும் மேற்பட்டோர் பலி
இதற்கு முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமாணி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதுடன் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இது பொறுப்பற்ற செயல் என்று கூறியிருப்பதுடன், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |