அலிகமேனியின் கொலைக்கு பழிவாங்கியே தீருவோம் : மொஜ்தபா கமேனி சூளுரை
கொல்லப்பட்ட தனது தந்தையும் முன்னோடியுமான அலி கமெனியின் கொலைக்கு பழிவாங்குவது "தேசத்தின் கோரிக்கை" என்றும், அது "நிச்சயமாக" நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இன்று (11)சனிக்கிழமை தெரிவித்துள்ளார்..
மறைந்த உச்ச தலைவருக்கான இறுதிச் சடங்குகளின் போது வழங்கப்பட்ட ஒரு செய்தியில் இந்தக் கருத்துக்கள் இடம்பெற்றதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.
பழிவாங்குவோம் என்று சபதம் செய்கிறோம்
"குற்றவாளிகளும் கண்ணியமற்றவர்களுமான கொலைகாரர்களிடமிருந்து, உங்கள் அப்பாவி இரத்தத்திற்கும் இந்த இரண்டு போர்களின் அனைத்து தியாகிகளுக்கும் நாங்கள் பழிவாங்குவோம் என்று சபதம் செய்கிறோம்," என்று மொஜ்தபா கமெனி அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு ஈரானிய நகரமான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் அலி கமெனி வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் ஒரு வார கால இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார்.
ட்ரம்பை கொல்ல ஈரான் புதிய திட்டம்
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகக் குற்றம்சாட்டும் உளவுத் தகவல்களை இஸ்ரேல் சமீபத்தில் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது.
வெள்ளிக்கிழமை தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், அதன் மீது "ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை" ஏவுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார்.
ஒப்பந்தத்திற்கு பின்னர் வெடித்த மோதல்
பெப்ரவரி பிற்பகுதியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும், ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெஹ்ரானும் ,வோஷிங்டனும் ஜூன் மாதம் கையெழுத்திட்டன.

அனைத்து முனைகளிலும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்கவும், ஹோர்முஸ் நீரிணையையை மீண்டும் திறக்கவும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கோரியது.
இந்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகப் போக்குவரத்து செல்வது தொடர்பாக இந்த வாரம் இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அமெரிக்கா ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்கியது, அதற்குப் பதிலடியாக ஈரான் அப்பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்களைக் குறிவைத்துத் தாக்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |