புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பிரதி அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.
பிரத்தியேக செயலி
அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.

சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் 2.1 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்க்கின்றோம்.
கூட்டு முயற்சி
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.

எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |