முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நௌபர் மௌலலி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு தாக்குதல்
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வவுணதீவு தாக்குதலின் உண்மைகளை கண்டறிந்து வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான சூழ்ச்சிகள் தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற நிலையில் அவற்றை விரைவில் நிறைவு செய்யவே எதிர்பார்க்கின்றோம். அந்த விசாரணைகள் சிஐடி ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் பிரகீத் எக்னலிகொட கடத்தல் சம்பவம், 11 பேர் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை முகாம் நிலத்தடி சிறையில் வைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன” என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |