பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இயங்கும் நிறைவேற்று, நிர்வாக, சுயாதீன மற்றும் அரசியல் தொழிற்சங்க ஊழியர்கள் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி மற்றும் 2 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் மங்கள தபரேரா தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாகப் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
2025 வரவு - செலவுத் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், 2025 வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்ட தமது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர், பிரதமர், நிதி பிரதி அமைச்சர் மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை சாதகமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

2026 மற்றும் 2027 வரவு - செலவுத் திட்டங்களின் ஊடாகவேனும் நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 18ஆம் திகதி அடையாளப் பணிப்புறக்கணிப்பும், கடந்த 25ஆம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் ஜனாதிபதி செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலக இணைப்புச் செயலாளருடனான சந்திப்பில், சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் ஊடாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், வரவு - செலவுத் திட்டத்தால் உருவாக்கப்பட்ட சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்க அந்த ஆணைக்குழுவால் முடியாது எனத் தொழிற்சங்கங்கள் விளக்கமளித்துள்ளன.
ஜனாதிபதி தலையிட வேண்டும்
மேலும், பிரதமருடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பிரச்சினையைத் துரிதமாகத் தீர்க்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்ட போதிலும், அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கமைய, டிசம்பர் முதலாம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தவும், டிசம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழக ஊழியர்களையும் இணைத்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாகப் பல்கலைக்கழகங்களின் பரீட்சை நடவடிக்கைகள், ஆய்வுப் பணிகள், ஆய்வுகூடப் பரிசோதனைகள் மற்றும் வெளிச் சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள் என்பன முழுமையாகப் பாதிப்படையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் பாதிப்படையாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டுத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |