யாழில் மதுபோதையில் செலுத்தப்பட்ட டிப்பர் : 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம் : இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாகியுள்ளன.
தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமானதால், அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவை தடைப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனம் வீதிகளில் மணலை கொட்டியுள்ளமையால், வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொடிகாமம் காவல்துறையினர் இன்று (29)அதிகாலை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சாரதி தப்பியோட்டம்
அதன்போது, கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் மறித்த வேளை, காவல்துறையினரின் கட்டளையை மீறி டிப்பர் வாகனத்தை அதன் சாரதி செலுத்தி தப்பியோடினார்.

டிப்பர் வாகனத்துடன் தப்பியோடிய டிப்பர் சாரதியை காவல்துறையினர் துரத்தி சென்ற வேளை, டிப்பரில் இருந்த மணலை வீதியில் கொட்டிய வண்ணம் தப்பியோடியுள்ளார்.
அதன்போது தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில், அதன் வயர்கள் டிப்பர் வாகனத்தில் கொளுவிய நிலையில் டிப்பர் தொடர்ந்து பயணித்தமையால், சுமார் 10 கம்பங்கள் முறிந்து சேதமாகியுள்ளன.
இந்நிலையில் தப்பியோடிய டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளதுடன், பளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சாரதியையும், உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.
மதுபோதை
கைது செய்யப்பட்ட சாரதியை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, சாரதி மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவத்தில், சேதமடைந்த தொலைத்தொடர்பு கம்பங்களை மாற்றி தொலைத்தொடர்பு சேவையை மீள வழங்க பணியாளர்கள் புனரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |