பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்கள் சபையில் இருக்க முடியாது : கொந்தளிக்கும் மொட்டுக்கட்சி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களும் இந்த சபையில் இருப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாவீரர் தினம் என்று பிரபாகரனை நினைவுகூர்ந்து வாரக் கணக்கில் வடக்கில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. எவருக்கும் தமது உறவினர், நண்பரை நினைவுகூரலாம்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்
ஆனால் துரைராசா ரவிகரன் எம்.பியினால் பிரபாரகரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து என்று இந்த சபையில் கூறியுள்ளார். அத்துடன் பால்ராஜ் என்பவருக்கு இந்த சபையில் வீரத்துவத்தை கூறினார். இவ்வாறாக கூறிய எம்.பிக்கு இந்த சபையில் இருப்பதற்கு உரிமை உள்ளதா என்று கேட்கின்றேன்.

மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த காரணத்தினாலேயே இவர்களால் இப்போது இப்படி கூற முடிகின்றது. மஹிந்த ராஜபக்சவே விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளின் கழுத்தில் இருந்த சைனட் குப்பிகளை அகற்றி அவர்களின் கைகளில் பாடப்புத்தகத்தையும் பென்சிலையும் கொடுத்தார்.
அவரே நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்கினார். எமது நாட்டை அழிவு நிலைக்கு கொண்டு சென்ற விடுதலைப் புலிகளை நினைவுகூருகின்றனர்.
கருத்து வெளியிட்ட ரவிகரன்
யாழ். கோப்பாய், வல்வெட்டித்துறை, சாவகச்சேரி போன்ற இடங்களில் நடந்த நினைவுகூரல் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர். சாவகச்சேரியில் நடந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

இதன்போது சபையில் இருந்த துரைராசா ரவிகரன் எம்.பி. ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி கூறுகையில், இவ்வாறு கூறுவதற்கு இவருக்கு தகுதியில்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்து இங்கு அனுப்புகின்றனர்.
மக்கள் கொண்டாடுவதையே நாங்கள் கொண்டாடுகின்றோம். இங்கே இதுபற்றி பேச இவருக்குதான் தகுதியில்லை. இப்படியென்றால் எவ்வாறு இனப்பிரச்சினையை தீர்ப்பீர்கள்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |