சர்வதேச ரீதியிலான சமையல் போட்டியில் ஈழத்தமிழர் படைத்த சாதனை!
உலகக் கோப்பை சமையல் போட்டியில் ஈழத்தமிழர் ஒருவர் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இவ்வாறு இலங்கைத் தேசிய அணியில் இடம்பிடித்து மூன்று பதக்கங்களை ரவிராஜ் தனுராஜ் என்பவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள லக்சம்பர்க்கில் இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவு
உலக நாடுகளுக்கு இடையில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த போட்டி இடம்பெறும்.
இந்தநிலையில் குறித்த உலகக் கோப்பை சமையல் போட்டியில் பங்கேற்ற முதல் இலங்கைத் தமிழர் இவர் ஆவார்.

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் ஒரு பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார்.
மாஸ்டர் செஃப் சிறிலங்கா (MasterChef Sri Lanka) நடுவர் உட்பட, சினமன் கிராண்ட் (Cinnamon Grand), ஹில்டன் (Hilton) மற்றும் சங்ரி-லா (Shangri-La) உள்ளிட்ட முன்னணி நட்சத்திர ஹோட்டல்களின் தலைமைச் சமையல் கலைஞர்களுடன் இணைந்து ஒரே அணியாகப் போட்டியிட்டு இவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
தேசிய அணி
இலங்கைத் தேசிய அணியின் பாஸ்தா (Pasta) பிரிவில் இடம்பிடித்த முதல் இலங்கைத் தமிழர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான ரவிராஜ் தனுராஜ், ஆண்டுதோறும் நடைபெறும் உணவுத் திருவிழாக்களிலும் பங்கேற்று வருகின்றார்.

உலக அரங்கில் தமது திறமையை வெளிப்படுத்திப் பதக்கங்களை வென்ற ரவிராஜ் தனுராஜுக்குப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் றீ(ச்)ஷாவில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெரும் உணவுத் திருவிழாவிலும் ரவிராஜ் தனுராஜ் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
