யாழ். நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேசத்திற்கான எரிபொருள் நிரப்பு நிலையம் இன்றைய தினம் (29) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், ஆகியோரின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்பட்டது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோகத் திட்டத்தின் கீழ், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கொண்டு செல்லப்பட்ட எரிபொருள்
இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, எரிபொருள் விநியோகத்திற்கான பவுசர் கடல் வழியாக நெடுந்தீவைச் சென்றடைந்திருந்தது.

இதற்கமைய, 6,600 லீற்றர் பெட்ரோல், 92 ஒக்டேன், 13,200 லீற்றர், ஓட்டோ டீசல் மற்றும் 19,800 லீற்றர் மண்ணெண்ணெய் என மொத்தமாக 39,600 லீற்றர் எரிபொருள் நெடுந்தீவுக்கு கடந்த வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுவரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்த நெடுந்தீவு மக்களுக்கு, இப்புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் பெரும் பயனளிப்பதுடன், அத்தியாவசியப் போக்குவரத்து, மீன்பிடித் தொழில் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் பெரிதும் உறுதுணையாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


