பரம எதிரிகளை ஒன்றிணைத்த சீனா - அமெரிக்காவிற்கு விழுந்த பேரிடி..!
பரம எதிரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன.
சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
கடுமையாக மோதல்
சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும். இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விடயங்களில் கடுமையாக மோதல் நிலவி வருகின்றன.
முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. உதாரணமாக ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது.
அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் இராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து பினாமி யுத்தம் செய்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 7 வருடங்களுக்கு முன் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக தங்கள் உறவை முறித்துக்கொண்டன.
பினாமி யுத்தங்கள்
சவுதி அரேபியாமூலம் ஷியா தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஈரானில் இருந்த சவுதி அரேபியா இராஜாங்க ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த மோதலால் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக உறவை முறித்துக்கொண்டன. இந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான மோதல் என்பது சவுதி அரேபியாயில் இராஜாங்க ரீதியாக பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இரண்டு நாடுகளும் பல்வேறு பினாமி யுத்தங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. இந்த போர் காரணமாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் மோதலாலும் அமெரிக்காவும் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது.
இதில் தலையிட்ட சீனா இவர்களுக்கு இடையில் நடுநிலை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
கடந்த 5 நாட்களாக இதற்காக பெய்ஜிங்கில் நடுநிலை பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
தீவிர பேச்சுவார்த்தை
அதன் முடிவாக தற்போது இரண்டு நாடுகளும் மீண்டும் உறவை தொடர்வதாக அறிவித்து உள்ளன. அதாவது இரண்டு நாடுகளும் மாறி மாறி தூதரகங்களை திறக்கும். தொலைபேசி மூலம் பேசுவதற்கான தொலைதொடர்பு திறக்கப்படும்.
அதேபோல் தூதரக ரீதியான பேச்சுவார்த்திகளும் இனி நடக்கும். இரண்டு நாட்டிற்கு இடையில் சீனா மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை நடவடிக்கைதான் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆகும். இவர்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்த ஏற்கனவே ஈராக் முயன்றது ஆனால் அப்போது பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில்தான் தற்போது ஈரான் சவுதி அரேபியா சீனாவின் மூலம் ஒன்றிணைந்து உள்ளன.
ஓமன் நாடும் இந்த சமரச பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இது மத்திய கிழக்கு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக அமெரிக்கா இந்த விடயத்தை விரும்பாது என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலும் ஏமன் போரிலும் இந்த விடயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
