ரஷ்யாவின் இடத்தில் தடம் பதித்த சீனா: துடைத்தெறிந்து விட்டு சென்ற ஈரான்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலால் பெரும் சேதம் அடைந்த ஈரான், அதன் பாதுகாப்புத் துறையை முழுமையாக மறுசீரமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக விமானப்படையில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உள்ள ஏதுவான தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், ஈரான் தனது விமானப்படையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
முன்னர் ஈரானுக்கு நெருக்கமாக இருந்த ரஷ்யா, அதன் பாதுகாப்புத் தேவைகளில் முக்கிய பங்காற்றியிருந்தது.
குறைந்த ரஷ்யாவின் நட்பு
எனினும், தற்போது ஈரான், ரஷ்யாவின் Su-24 மற்றும் MiG-29 போன்ற பழைய தலைமுறை விமானங்களை மட்டும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் இவை நவீன போர் சூழ்நிலைகளுக்கு பயன்பட முடியாத நிலையில் உள்ளன.
Sukhoi Su-35 போன்ற 5வது தலைமுறை விமானங்களை வாங்கிய ஒப்பந்தம் கடைசிக்கட்டத்தில் இருந்த போதும், உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போர் காரணமாக அந்த ஒப்பந்தம் இழுபறியில் சிக்கி உள்ளது.விமானங்களை தயாரித்து ஈரானுக்கு வழங்க ரஷ்யாவுக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரான் தனது கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது. சீனாவின் 4.5ம் தலைமுறை மல்டி-ரோல் போர் விமானமான J-10C–யை வாங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நவீன வசதிகள்
இந்த விமானங்களில், AESA ரேடார், டிஜிட்டல் காக்பிட், PL-15 நீண்ட தூர ஏவுகணைகள், மாக் 2 (Mach 2) வேகம், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை, அமெரிக்காவின் F-16, இந்தியாவின் ரஃபேல், இஸ்ரேலின் F-35 ஆகியவைக்கு நிகராக இருக்கும் என கூறப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே, சமீபத்தில் சீனாவுக்கு சென்று J-10C வாங்கும் விடயத்தில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளார்.
உறுதிப்படுத்திய சீனா
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற வேளையில், இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜியாங் பின் (Jiang Bin) இதனை உறுதி செய்துள்ளார்.
அவர் “நமது நட்பு நாடுகளுடன் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்; இது பிராந்திய அமைதிக்குப் பெரும் பங்களிப்பு செய்யும்,” என தெரிவித்துள்ளார்.
அணுஆயுத நெருக்கடி தொடர்ந்து நிலவும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை மீண்டும் தாக்கலாம் என்கிற அச்சம் எப்போதும் இருப்பதாலேயே, ஈரான் தனது விமானப்படையை நவீனப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
