ஈரானால் பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் : கசிந்த உளவுத்துறை தகவல்
கடந்த 2022 முதல் பிரித்தானியாவில் (United Kingdom) வசிக்கும் மக்கள் மீது ஈரானால் (Iran) நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பிரித்தானிய மக்களுக்கு பரந்த அளவிலான, தொடர்ச்சியான மற்றும் கணிக்க முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள உளவத்துறை அறிக்கையில், ஈரானின் உளவுத்துறை சேவைகள் பெரும்பாலும் மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் பிரித்தானியாவிற்குள் படுகொலை முயற்சிகள் முன்னெடுப்பதற்கும், பிரித்தானியாவிலிருந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகவும் திறமையாகவும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தல் முயற்சி
மேலும், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2023 ஒகஸ்ட் வரை பிரித்தானியாவை சேர்ந்த நபர்களுக்கு எதிராக 15 கொலை மற்றும் கடத்தல் முயற்சிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல் பெரும்பாலும் அதிருப்தியாளர்கள் மற்றும் ஈரான் ஆட்சிக்கு எதிரான பிறரை மையமாகக் கொண்டிருந்தாலும், பிரித்தானியாவில் யூத மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு அதிகரித்த அச்சுறுத்தல் இருப்பதாகவும் குழு கூறுகிறது.
அறிக்கைக்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர், தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான இடங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
பிரித்தானிய அரசாங்கம்
ஈரானுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக மேலும் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், மொத்த தடைகளின் எண்ணிக்கையை 450 ஆகக் கொண்டு வந்துள்ளோம் என்றார்.
ஆனால், பிரித்தானிய உளவுத்துறை அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான், அந்த அறிக்கை ஆதாரமற்றது, அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் விரோதமானது என குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
