ஈரானின் பாரிய ஏவுகனை தாக்குதலை முறியடித்த சவூதி அரேபியா...!
சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஷய்பா (Shaybah) எண்ணெய் வயல் மற்றும் முக்கிய இராணுவ இலக்குகளை நோக்கி நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தமது பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகச் சவூதி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ஷய்பா எண்ணெய் வயலை இலக்கு வைத்து நான்கு கட்டங்களாக ஏவப்பட்ட மொத்தம் 16 ட்ரோன்கள் வான் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பாலிஸ்டிக் ஏவுகணை
அத்தோடு, அல்-கர்ஜில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப் படைத்தளத்தை நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஒரு குரூஸ் ஏவுகணையும் நடுவானில் தகர்க்கப்பட்டன.

தலைநகர் ரியாத்திற்கு கிழக்கே மற்றுமொரு ட்ரோன் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களில் அல்-கர்ஜ் தொழில்பேட்டை மண்டலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் முயற்சி இதுவாகும்.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
எரிவாயு வயல்
சவூதியின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் ஒன்றான ஷய்பா மீது பிப்ரவரி 28-இற்குப் பின்னர் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் முயற்சி இதுவாகும்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 125-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இடைமறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தமக்கு முழு உரிமை உள்ளதாகச் சவூதி அரேபியா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |