இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஈரான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில், நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
உத்தியோகபூர்வ கலந்துரையாடல்
மேலும், இலங்கைக்கு விஜயம் செய்யும் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளனர்.
கடந்த ஆண்டு (2023) ஓகஸ்ட் மாதம், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, தெஹ்ரானிற்கு விஜயம் செய்திருந்த போது ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் இருதரப்பு விவாதங்களை நடத்தியிருந்தார்.
மேலும், இலங்கைக்கு வருகைதரவுள்ள டொக்டர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, எரிசக்தி அமைச்சு மற்றும் ஈரானின் பிற தொடர்புடைய அமைச்சுக்களின் மூத்த அதிகாரிகளும் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |