ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்! காலவரையறையின்றி மூடப்பட்ட வான்பரப்புகள்
புதிய இணைப்பு
மத்திய கிழக்கில் கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய நேரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடங்கி உள்ளது.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலின் போது, ஈரான் மட்டுமன்றி சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை, சிரியா மற்றும் ஈராக்கில் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், குறித்த வான்வெளி தாக்குதலை சிரியா தனது வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் அதனை தடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், ஈராக் தற்போது இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஈரானுடன் மோதுவதால் ஈராக்கும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் ஈராக் மீதும் குறிவைத்துள்ளது.
அதேநேரம், சிரியாவில் பல இடங்களில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் செயல்பட்டு வருகின்றமையினால் சிரியாவையும் இஸ்ரேல் குறிவைத்து தாக்கியுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பில் தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகேரி,“ ஈரான் மீதான தாக்குதலின் போது இஸ்ரேலின் விமானப்படை 100 க்கும் மேற்பட்ட விமானங்களைப் பயன்படுத்தியது.
அதில், புதிய அமெரிக்க F-35 போர் விமானங்களும் அடங்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகியவை தங்களது வான்பரப்பை காலவரையறையின்றி மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மறுஅறிவித்தல் வரும் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஈராக் வான்வெளியில் விமானப் போக்குவரத்தை பாதுகாக்க இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் பதிலடி
இதேவேளை, ஈரானின் இலக்குகளுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் தாம் ஈடுபடவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மையில், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பாரிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.
அதன்படி, தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வெடிப்புகள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்தன.
இஸ்ரேலிய இராணுவம் (IDF) இந்த நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதுடன் ஈரானிய இராணுவ தளங்கள்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |