கைபர் ஷேகன் -Khyber Shaken- ஏவுகணைகளால் அதிரும் மத்திய கிழக்கு!
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தனது 77ஆவது கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், இஸ்ரேலின் வடக்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை இலக்கு வைத்து அதிநவீன கைபர் ஷேகன் (Khyber Shekan) ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதிரடித் தாக்குதல்கள்
இஸ்ரேலைத் தவிர குவைத்தில் உள்ள அலி அல் சலேம், சவுதி அரேபியாவின் அல் கர்ஜ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் தாக்கியுள்ளதாக IRGC உரிமை கோரியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முரண்பாடான நடத்தைகள் எங்களை ஒருபோதும் பின்வாங்கச் செய்யாது என்றும் இந்தப் போரைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுப்போம் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் நிலைகுலைவை ஏற்படுத்தியுள்ளன.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை இடைமறிக்க முயன்று வரும் வேளையில் இந்த 77ஆவது கட்டத் தாக்குதல் பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |