அமெரிக்காவின் இரண்டு ட்ரோன்களை கைப்பற்றியது ஈரான் : ஒரு ட்ரோன் தாக்கி அழிப்பு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC), கெஷ்ம் தீவுக்குத் தெற்கே அமெரிக்காவின் இரண்டு MQM-170 உளவு ட்ரோன்களைக் கைப்பற்றியுள்ளதாக திங்கள்கிழமை இரவு அறிவித்தது. அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியில், அமெரிக்காவின் MQ-9 ரக ட்ரோன் ஒன்றை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ஈரானின் அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், IRGC-ன் மக்கள் தொடர்புத் துறை, தங்களின் விண்வெளிப் படை (Aerospace Force) பயன்படுத்தும் மேம்பட்ட மின்னணு போர்முறை (electronic warfare) அமைப்புகள் மூலம் இந்த இரண்டு MQM-170 ட்ரோன்களும் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ட்ரோன்களின் எண்ணிக்கை
இந்தச் சம்பவத்தின் மூலம், IRGC அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இத்தகைய அமெரிக்க ட்ரோன்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதில் மீண்டும் தோல்வியடைந்துள்ளதாகவும், இது அமெரிக்க இராணுவத்திற்கும், மத்திய கட்டளைத் தளபதி (CENTCOM Commander) பிராட் கூப்பருக்கும் ஏற்பட்ட மற்றொரு பின்னடைவு என்றும் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வீழ்த்தப்பட்ட மற்றைய ட்ரோன்
மற்றொரு அறிக்கையில், தங்களின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் 55-வது MQ-9 ட்ரோனை இடைமறித்து அழித்ததாக IRGC அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஈரானின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கீழ் இயங்கும், IRGC விண்வெளிப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியில் இந்த ட்ரோன் குறிவைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |